திருவூஞ்சல் பாடல்கள்

புங்குடுதீவு பாணாவிடைப்பதி
ஸ்ரீ பர்வதவர்த்தனி அம்பாள் சமேத இராமலிங்கேஸ்வரர்
திருவூஞ்சல்
காப்பு
பொன்னிலங்கு ஈழத்து ராமேஸ்வரப்
பூங்குடியின் பாணாவிடைத் தலத்தில் மேவும்
அன்னை பர்வதவர்த்தனி சமேதரராகி
அரனார் ராமலிங்கேஸ்வரர்  மகிழ்ந்தே
கன்னல் தமிழ் திருவூஞ்சல் தனிலே வைதி
களித்தாட ஊஞ்சலிசை  பாடி ஏத்த
வன்னமருப்  பழகனான வார  ணனின்
வளந் திகழும் செஞ்சரணம் காப்பு தாமே.

வேத நாற்பவளத் தூண் விளங்க நாட்டி
விரிந்த சிவா கமவயிர விட்டம் பூட்டி
நாதமாம் கலை ஞானக் கயிறு மாட்டி
நாவினஓங் காரமெனும் பீடம் தேக்கு
மாதவளாம் பர்வதவர்த் தனியா ளோடு
மருவுதமிழ்த்  திருவூஞ்சல் தனிலே வைகி
ஈதல்நிறை பூன்குடியின் பாணாவிடை
இராமலிங்கேஸ்வரரே ஆடீர் ஊஞ்சல்

அன்பொழுகும் கால் நிறுத்தி ஆத்மஜீவன்
ஐந்து புலன் விட்டமத்தை ஒன்றாய்ச்  சேர்த்தே
இன்புறு நாற் கரணவடம் இழுத்தே மாட்டி
இணைந்த திரு வருளென்ற  பீடம் தேக்கி
என்புருகப் பேரின்ப முத்தியூஞ்சல்
எழிலாக ஜீவன் அவன் ஆடருள் செய்
இன்பதியாம் பூங்குடியின் பாநணாவிடை
இராமலிங்கேஸ்வரரே ஆடீர்  ஊஞ்சல்

பணியரவு மதிச்சடையின் குஞ்சி ஆடப்
பால் வெண்ணீற்றழகினொடு நுதலும் ஆட
குனிவு தவழ் புருவச் செவ்விதழ்கள் ஆட
குமிழ் இதழின் நகை அழகு கொஞ்சி ஆடப்
புனையு குண்டலங்களோடு தோடும் ஆட
புலித்தோலின் உரியாடல் பூணூல் ஆடப்
இனியபதி பூங்குடியின் பாணா விடை
இராமலிங்கேஸ்வரரே ஆடீர் ஊஞ்சல்

பரைபர்வ தவர்த்தனி மருவி ஆட
பாம்பினா பரணங்கள் சுழன்றே ஆட
வரை கடந்த அருள் நல்கும்வரதமாட
வரும் அடியார் பயம் தீர்க்கும் அபயமாட
நிரை  நிரையாய் நின்வாசல் நிற்கும் பக்தர்
நித்திலம் சேர் ஆனந்தவிழி நீராட
இறைகடல் சூழ் பூங்குடியின் பாணா விடை
இராமலிங்கேஸ்வரரே ஆடீர் ஊஞ்சல்

துலங்கரத் துடியதுவும் ஒலித்தே ஆட
தீப்பிழம்பின் அனந்த ஜோதி கரத்திலாட
கலங்கு விழி மானாட  மழுவும் ஆட
காதல் மிகு பர்வதவர்த்தனி யாளுமாட
தலங்கரையின் கடலாட அலைகளாட
தந்த முகத்தையனவன் கூத்துமாட
இலங்குபதிப் பூங்குடியின் பாணாவிடை
இராமலிங்கேஸ்வரரே ஆடீர் ஊஞ்சல்

பனகவணி க் கபாலவட மாலை ஆடப்
பர்வதவர்த்தனியாலளும் மருவி ஆடக் ¨
கனக வட அக்கமணி வடமுமாடக்
கண்டமதில் நீலகண்டம் மிளிர்ந்தே ஆட
சனகசனந் தனர் நால்வர் பாடி ஆட
சாரங்கன் பிரம்மனொடு தேவர் ஆட
இனமலர் சூழ்பூங்குடியின் பாணாவிடை
இராமலிங்கேஸ்வரரே ஆடீர் ஊஞ்சல்

ஞாயிறு திங்கள் அக்னிக் கண்களாட
         ஞானியர்போற்று  செவ்வாய் முறுவல் ஆட
தோயுசம்பு தன்கழுத்தில் வியாழன் ஆட
        திருப்பாத வெள்ளிச் சிலம்புமாட
ஆலவிடை தனிலே ஆசனிக்கும்
        அம்மைபர்வ தவர்த்தனி அருளை அள்ளி
ஈயுதலம் பூங்குடியின் பாணா விடை

       இராமலிங்கேஸ்வரரே ஆடீர் ஊஞ்சல்

மண் சுமந்த பிட்டுண்ட களைப்பும் தீர
மன்னன் அன் றடித்த அடி வலியுமாறக்
கண்ணெழு ந்த குருதி சொரி  நோவுமாற
கண்ணப்பன் கால் பட்ட தழும்புமாற
பண் சுமந்த சுந்தரர் சொற் பித்தம் நீங்க
பரவைக்கு தூது சென்ற பாதம் தாங்க
அண்ணலருள் பூங்குடியின் பாணாவிடை
இராமலிங்கேஸ்வரரே ஆடீர் ஊஞ்சல்

தென்னிலங்கை வேந்தனவன் இராவணேசன்
தினவெடுத்த தோள்களினால் மலையைத் தூக்க
சென்னியிற்  கால் விரல்  ஊன்றிச்  செருக்கும் தீர்த்த
செவியார வீணையிசை கேட்பாய் தேவா
இன்னிசை பூங்குடியின் பாணா விடை
இராமலிங்கேஸ்வரரே ஆடீர் ஊஞ்சல்

சங்கரனே சாம்பசிவா ஆடீர் ஊஞ்சல்
சாரங்கன் மைத்துனரே ஆடீர் ஊஞ்சல்
துங்கமுகன் தந்தையே நீர் ஆடீர் ஊஞ்சல்
தோகை வேலன் சீடரே நீர் ஆடீர் ஊஞ்சல்
திங்களணி வேணியரே ஆடீர் ஊஞ்சல்
திருக்கைலாசத் துறைவோ ய் ஆடீர் ஊஞ்சல்
இங்கிதம் சேர் பூங்குடியின் பாணா விடை
இராமலிங்கேஸ்வரரே ஆடீர் ஊஞ்சல்

வாழி
மறையோதும் வானவரும் மாரி  வாழி
மாதுபர்வ தவர்த்தனி அம்மை வாழி
குறை ஏதும் இல்லாத செங்கோல் வாழி
குவலயத்தில் மாதரவர் கற்பும் வாழி
நிறைவெல்லாம் நீடூழி வாழி  வாழி
நெஞ்சமதில் இறை பக்தி போங்க வாழி
இறையருட் பூங்குடி பாணாவிடையும் வாழி
இராமலிங்கேஸ்வரரும் வாழி