02.049 பண்ணின் நேர்மொழி
தலம் : சீர்காழி – 10-காழி
அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : இரண்டாம் திருமுறை
பண் : சீகாமரம்
நாடு : சோழநாடு காவிரி வடகரை
சுவாமி : பிரமபுரீஸ்வரர்;
அம்பாள் : திருநிலைநாயகி.
திருச்சிற்றம்பலம்
பண்ணின் நேர்மொழி மங்கை மார்பலர்
பாடி யாடிய வோசை நாடொறுங்
கண்ணின் நேரயலே பொலியும் கடற்காழிப்
பெண்ணின் நேரொரு பங்கு டைப்பெரு
மானையெம்பெரு மான்என் றென்றுன்னும்
அண்ண லாரடியார் அருளாலுங் குறைவிலரே. 1
மொண்ட லம்பிய வார்தி ரைக்கடல்
மோதி மீதெறி சங்கம் வங்கமுங்
கண்டலம் புடைசூழ் வயல்சேர் கலிக்காழி
வண்ட லம்பிய கொன்றை யானடி
வாழ்த்தி யேத்திய மாந்தர் தம்வினை
விண்டல் அங்கெளிதாம் அதுநல் விதியாமே. 2
நாடெ லாமொளி யெய்த நல்லவர்
நன்று மேத்தி வணங்கு வார்பொழிற்
காடெ லாமலர் தேன்துளிக்குங் கடற்காழித்
தோடு லாவிய காது ளாய்சுரி
சங்க வெண்குழை யாயென் றென்றுன்னும்
வேடங் கொண்டவர்கள் வினைநீங்க லுற்றாரே. 3
மையி னார்பொழில் சூழ நீழலில்
வாச மார்மது மல்க நாடொறுங்
கையி னார்மலர் கொண்டெழுவார் கலிக்காழி
ஐய னேயர னேயென் றாதரித்
தோதி நீதியு ளேநி னைப்பவர்
உய்யு மாறுலகில் உயர்ந்தாரி னுள்ளாரே. 4
மலிக டுந்திரை மேல்நி மிர்ந்தெதிர்
வந்து வந்தொளிர் நித்தி லம்விழக்
கலிக டிந்தகையார் மருவுங் கலிக்காழி
வலிய காலனை வீட்டி மாணிதன்
இன்னு யிரளித் தானை வாழ்த்திட
மெலியுந் தீவினைநோ யவைமே வுவர்வீடே. 5
மற்றும் இவ்வுல கத்து ளோர்களும்
வானு ளோர்களும் வந்து வைகலுங்
கற்ற சிந்தையராய்க் கருதுங் கலிக்காழி
நெற்றி மேலமர் கண்ணி னானை
நினைந்தி ருந்திசை பாடுவார் வினை
செற்ற மாந்தரெனத் தெளிமின்கள் சிந்தையுளே. 6
தான லம்புரை வேதி யரொடு
தக்க மாதவர் தாந்தொ ழப்பயில்
கானலின் விரைசேர விம்முங் கலிக்காழி
ஊனு ளாருயிர் வாழ்க்கை யாயுற
வாகி நின்றவொ ருவனே யென்றென்
றானலங் கொடுப்பார் அருள்வேந்த ராவாரே. 7
மைத்த வண்டெழு சோலை யாலைகள்
சாலி சேர்வய லார வைகலுங்
கத்து வார்கடல் சென்றுலவுங் கலிக்காழி
அத்த னேயர னேய ரக்கனை
யன்ற டர்த்துகந் தாயு னகழல்
பத்தராய்ப் பரவும் பயன் ஈங்கு நல்காயே. 8
பரும ராமொடு தெங்கு பைங்கத
லிப்ப ருங்கனி யுண்ண மந்திகள்
கருவரா லுகளும் வயல்சூழ் கலிக்காழித்
திருவின் நாயக னாய மாலொடு
செய்ய மாமலர்ச் செல்வ னாகிய
இருவர் காண்பரியா னென ஏத்துத லின்பமே. 9
பிண்ட முண்டுழல் வார்க ளும்பிரி
யாது வண்துகி லாடை போர்த்தவர்
கண்டு சேரகிலார ழகார் கலிக்காழித்
தொண்டை வாயுமை யோடு கூடிய
வேட னேசுட லைப்பொ டியணி
அண்டவாண னென்பார்க் கடையா அல்லல்தானே. 10
பெயரெ னும்மிவை பன்னி ரண்டினும்
உண்டெ னப்பெயர் பெற்ற வூர்திகழ்
கயலுலாம் வயல்சூழ்ந் தழகார் கலிக்காழி
நயன டன்கழ லேத்தி வாழ்த்திய
ஞான சம்பந்தன் செந்த மிழுரை
உயருமா மொழிவா ருலகத் துயர்ந்தாரே. 11
திருச்சிற்றம்பலம்02.066 மந்திர மாவது நீறு
தலம் : ஆலவாய் (மதுரை)
அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : இரண்டாம் திருமுறை
பண் : காந்தாரம்
நாடு : பாண்டியநாடு
சிறப்பு: திருநீற்றுப்பதிகம்
சுவாமி : சொக்கலிங்கப்பெருமான்;
அம்பாள் : அங்கயற்கண்ணி.
திருச்சிற்றம்பலம்
மந்திர மாவது நீறு
வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு
துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு
சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன்
திருஆல வாயான் திருநீறே. 1
வேதத்தி லுள்ளது நீறு
வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு
புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு
உண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த
திருஆல வாயான் திருநீறே. 2
முத்தி தருவது நீறு
முனிவ ரணிவது நீறு
சத்திய மாவது நீறு
தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு
பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு
திருஆல வாயான் திருநீறே. 3
காண இனியது நீறு
கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க் கெல்லாம்
பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு
மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு
திருஆல வாயான் திருநீறே. 4
பூச இனியது நீறு
புண்ணிய மாவது நீறு
பேச இனியது நீறு
பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு
வந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு
திருஆல வாயான் திருநீறே. 5
அருத்தம தாவது நீறு
அவலம் அறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு
வானம் அளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு
புண்ணியர் பூசும்வெண் ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த
திருஆல வாயான் திருநீறே. 6
எயிலது வட்டது நீறு
விருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவது நீறு
பாக்கிய மாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு
சுத்தம தாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத்
தாலவா யான் திருநீறே. 7
இராவணன் மேலது நீறு
எண்ணத் தகுவது நீறு
பராவண மாவது நீறு
பாவ மறுப்பது நீறு
தராவண மாவது நீறு
தத்துவ மாவது நீறு
அராவணங் குந்திரு மேனி
ஆலவா யான்திரு நீறே. 8
மாலொ டயனறி யாத
வண்ணமு முள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள்
மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும்
இன்பந் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம்
மாலவா யான்திரு நீறே. 9
குண்டிகைக் கையர்க ளோடு
சாக்கியர் கூட்டமுங்கூட
கண்டிகைப் பிப்பது நீறு
கருத இனியது நீறு
எண்டிசைப் பட்ட பொருளார்
ஏத்துந் தகையது நீறு
அண்டத்த வர்பணிந் தேத்தும்
ஆலவா யான்திரு நீறே. 10
ஆற்றல் அடல்விடை யேறும்
ஆலவா யான்திரு நீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும்
பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்னனுடலுற்ற
தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும்
வல்லவர் நல்லவர் தாமே. 1102.085 வேயுறு தோளிபங்கன்
தலம் : பொது
அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : இரண்டாம் திருமுறை
பண் : பியந்தைக்காந்தாரம்
நாடு : பொது
சிறப்பு: கோளறு திருப்பதிகம்
திருச்சிற்றம்பலம்
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 1
என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க
எருதேறி யேழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும்
உடனாய நாள்க ளவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 2
உருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வ மான பலவும்
அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 3
மதிநுதல் மங்கையோடு வடவாலி ருந்து
மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர்
கொடுநோய்க ளான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 4
நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும்
மிகையான பூத மவையும்
அஞ்சிடும் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 5
வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர்
மடவாள் தனோடு முடனாய்
நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி யுழுவையோடு கொலையானை கேழல்
கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 6
செப்பிள முலைநன்மங்கை யொரு பாகமாக
விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியும்அப்பும் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 7
வேள்பட விழிசெய்தன்று விடைமே லிருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 8
பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கும் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர்
வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 9
கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமு மதியுநாகம் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரொ டமணைவாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 10
தேனமர் பொழில் கொளாலை விளைசெந்நெல்துன்னி
வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே. 11
திருச்சிற்றம்பலம்02.037 சதுரம் மறைகுழலி
தலம் : மறைக்காடு
அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : இரண்டாம் திருமுறை
பண் : இந்தளம்
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
சுவாமி : மறைக்காட்டு மணாளர்;
அம்பாள் : யாழைப்பழித்த மொழியாள்.
திருச்சிற்றம்பலம்
சதுரம் மறைதான்
துதிசெய் துவணங்கும்
மதுரம் பொழில்சூழ்
மறைக்காட் டுறைமைந்தா
இதுநன் கிறைவைத்
தருள்செய்க எனக்குன்
கதவந் திருக்காப்புக்
கொள்ளுங் கருத்தாலே. 1
சங்கந் தரளம்
மவைதான் கரைக்கெற்றும்
வங்கக் கடல்சூழ்
மறைக்காட் டுறைமைந்தா
மங்கை உமைபா
கமுமா கவிதென்கொல்
கங்கை சடைமே
லடைவித் தகருத்தே. 2
குரவங் குருக்கத்
திகள்புன் னைகள்ஞாழல்
மருவும் பொழில்சூழ்
மறைக்காட் டுறைமைந்தா
சிரமும் மலருந்
திகழ்செஞ் சடைதன்மேல்
அரவம் மதியோ
டடைவித் தலழகே. 3
படர்செம் பவளத்
தொடுபன் மலர்முத்தம்
மடலம் பொழில்சூழ்
மறைக்காட் டுறைமைந்தா
உடலம் முமைபங்
கமதாகியு மென்கொல்
கடல்நஞ் சமுதா
அதுவுண் டகருத்தே. 4
வானோர் மறைமா
தவத்தோர் வழிபட்ட
தேனார் பொழில்சூழ்
மறைக்காட் டுறைசெல்வா
ஏனோர் தொழுதேத்த
இருந்தநீ யென்கொல்
கானார் கடுவே
டுவனா னகருத்தே. 5
பலகா லங்கள்வே
தங்கள்பா தங்கள் போற்றி
மலரால் வழிபா
டுசெய்மா மறைக்காடா
உலகே ழுடையாய்
கடைதோ றும்முன்னென்கொல்
தலைசேர் பலிகொண்
டதிலுண் டதுதானே. 6
வேலா வலயத்
தயலே மிளிர்வெய்தும்
சேலார் திருமா
மறைக்காட் டுறைசெல்வா
மாலோ டயன்இந்
திரன்அஞ் சமுன்என்கொல்
காலார் சிலைக்கா
மனைக்காய்ந் தகருத்தே. 7
கலங்கொள் கடலோ
தம்உலா வுங்கரைமேல்
வலங்கொள் பவர்வாழ்த்
திசைக்கும் மறைக்காடா
இலங்கை யுடையான்
அடர்ப்பட் டிடரெய்த
அலங்கல் விரலூன்
றியருள் செய்தவாறே. 8
கோனென் றுபல்கோ
டியுருத் திரர்போற்றும்
தேனம் பொழில்சூழ்
மறைக்காட் டுறைசெல்வா
ஏனங் கழுகா
னவருன்னை முன்என்கொல்
வானந் தலமண்
டியுங்கண் டிலாவாறே. 9
வேதம் பலவோ
மம்வியந் தடிபோற்ற
ஓதம் முலவும்
மறைக்காட்டி லுறைவாய்
ஏதில் சமண்சாக்
கியர்வாக் கிவையென்கொல்
ஆத ரொடுதா
மலர்தூற்றி யவாறே. 10
காழிந் நகரான்
கலைஞான சம்பந்தன்
வாழிம் மறைக்கா
டனைவாய்ந் தறிவித்த
ஏழின் னிசைமா
லையீரைந் திவைவல்லார்
வாழி யுலகோர்
தொழவான் அடைவாரே. 11
திருச்சிற்றம்பலம்
Share this: